தகாத வார்த்தையில் திட்டி தவணை வசூலிக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினர்...

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் வாடிக்கையாளரை, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டி, தவணைத் தொகையினை செலுத்தச் சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகாத வார்த்தையில் திட்டி  தவணை வசூலிக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினர்...

ஈரோடு மாவட்டம் கொங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். சில ஆண்டுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பஜாஜ் ஃபைனான்ஸில்,ஒரு தொலைக்காட்சி வாங்கி தவணைத் தொகையினை முறையாக செலுத்தியுள்ளார்.

பின்னர் அந்நிறுவனம் தொடர்ந்து வற்புறுத்தியதால், மீண்டும் 33 ஆயிரம் ரூபாயில் வாஷிங் மெஷினை தவணை முறையில் வாங்கியுள்ளார். மொத்தமுள்ள 20 தவணைகளில் 17 தவணைகளை வீரக்குமார் கட்டிய நிலையில், இன்னும் 3 தவணைகளில் சுமார் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே மிச்சம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாத தவணையை கட்டாததால், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனக்கூறி வீரக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தவணை தொகையை செலுத்தாதது குறித்து  தகாத வார்த்தைகளில் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வீரக்குமார், பேரிடர் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.