தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: எவையெல்லம் இயங்கும் முழு விவரம் இதோ...

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: எவையெல்லம் இயங்கும் முழு விவரம் இதோ...

இந்த முழு ஊரடங்கு வரும் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது, செயல்பட அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் மக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி , கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும் என்றும், கை சுத்திகரிப்பான்களை கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடைகளில் பணிபுரியும் நபர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்

கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில், குறியீடுகள் போடப்பட வேண்டும்

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்

மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள், சேவை கோருபவரின் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி என்றும், விற்பனை நிலையங்களுக்கு அனுமதி இல்லை எனவும்  கூறப்பட்டுள்ளது.

இதைப்போல வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதிப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி என்றும், விற்பனை கடைகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூறியுள்ள தமிழக அரசு,

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளது.

மண்பாண்டம், கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனைக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றிற்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதர 27 மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி என்றும்,

டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் எனவும் கூறியுள்ள தமிழக அரசு,

செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி என்றும்,

கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி எனவும் தெரிவித்துள்ளது.

மிக்சி, கிரைண்டர், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.