கர்நாடகவில் பெரம்பூர் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்த காவல்துறை

கர்நாடகவில் பெரம்பூர் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்த காவல்துறை

சென்னை பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவர் ஜெயலலிதா கோல்ட் பேலஸ் என்ற நகைக்கடையை நடத்தி வந்தார். கடந்த மாதம் 10 ஆம் தேதி நள்ளிரவு இவரது கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து உடைத்து கடையில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு கிலோ தங்க நகை மற்றும் வைர நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர் இது தொடர்பாக திரு வி க நகர்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 21 நாட்களுக்குப் பின்னர் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கர்நாடகாவை சேர்ந்த கஜேந்திரன், திவாகர் என்ற இரண்டு கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செம்பியம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.

இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கங்காதரன் மற்றும் அவருடைய கூட்டாளி ஸ்டீபன் ஆகிய இருவரையும் பெங்களூர் போலீசார்
வாகன சோதனையின் போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து  இரண்டரை கிலோ தங்க நகைகளை பெங்களூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.தற்போது கைது செய்யப்பட்டுள்ள கஜேந்திரன் ஐடிஐ படித்துள்ளதாகவும் இவர் வெல்டிங் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்ததால், இவரை வைத்து தான் ஷட்டரை வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு தப்பி சென்றதாகவும், அதில் இருவர் பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள மீதமுள்ள இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள திவாகரை தவிர மீதமுள்ள ஐந்து பேர்கள் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | மீன் பிடிக்க சென்ற 13 வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் கார் எண்ணை பயன்படுத்தி, கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் திருடிய காரை கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய முக்கிய கொள்ளையன் கங்காதரன் மற்றும் அவருடைய கூட்டாளி ஸ்டீபன் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வருவதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இரண்டு கொள்ளையர்களையும் பிடிப்பதற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தையும் மீட்பதற்கான வேலைகளில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்