கவர் ஸ்டோரிதமிழ்நாடு

ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நடப்பது என்ன? – அதிர்ச்சி ரிப்போர்ட்

ஓபிஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று 2-வது நாளாக ஆலோசனை

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வியால், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7 ஆம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக அறிவிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, முதல்வர் பழனிசாமி நடத்தும் அரசு கூட்டங்களில் எப்போதும் பங்கேற்கும் ஓ.பன்னீர் செல்வம், இன்று மாவட்ட ஆட்சியாளர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறதோ என்ற ஐயம் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் நேற்று திடீர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட, ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மணிகண்டன் ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இல்லை என வைத்தியலிங்கம் எம்.பி. தெரிவித்திருந்தார்.

இதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினர். அமைச்சர்கள் மாறி மாறி சந்திப்பதன் மூலம் அதிமுகவில் கருத்து வேறுபாடு நிலவி வருவது உறுதியாகி உள்ளதாக அரசியல் விமசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர்.

இதேபோல், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேற்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று ஓபிஎஸ் உடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button