இடைக்கால பட்ஜெட் 2021: பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை தாக்கிய நிவர், புரெவி புயல் மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், காய்கறிகள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகின. இதனைக்கண்டு வேதனை அடைந்த முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளின் துயரத்தை போக்க தொடர்ச்சியாக பல்வேறு2 நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
முதற்கட்டமாக மானாவாரிப்பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றிற்கு 7 ஆயிரத்து 410 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும், நெல் மற்றும் இதர இறைவைப் பயிர்களுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாயும், பல்லாண்டு கால பயிர்களுக்கு 18 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சட்டமன்ற பேரவையில் விதி எண். 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 புள்ளி 43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.