இந்தியாகவர் ஸ்டோரி

நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்த சம்பவம் – நினைவில் வாழும் ஆசிபா!

சாஞ்சி ராமின் திட்டத்தின்படி, கோவிலுக்குள் தூக்கிச் செல்லப்பட்ட அந்த சிறுமிக்கு clonazepam எனப்படும் மருந்தை செலுத்தி தொடர்ந்து, மயக்கத்தில் வைத்திருக்கின்றனர். சாஞ்சி ராமின் மகன் உள்ளிட்ட பலர் அந்த சிறுமியை அடுத்தடுத்து பலாத்காரம் செய்தனர். மயக்கம் தெளிந்த உடன் மீண்டும் மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

இந்தியாவை மட்டுமல்லாமல் உலகத்தையே உலுக்கிய சம்பவம் சிறுமி ஆசிபா, பலாத்கார கொலைச் சம்பவம். 3 ஆண்டுகள் கடந்தும், அந்த சம்பவத்தை அசைபோடும் போது, துக்கம் நம் மனங்களில் நிழலாடுகிறது. மிருகத்தை விட மோசமாக மனிதர்களால் நடந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு அது. பால் வடியும் முகத்துக்கு சொந்தக்காரி அந்த 8 வயது சிறுமி ஆசிபா.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி, மேயச் சென்ற தனது குதிரைகளை மீண்டும் வீட்டுக்கு கொண்டு வருவதற்காக பிற்பகல் 2 மணியளவில் வயல் வெளிக்கு சென்றாள். மாலை 4 மணியளவில் குதிரைகள் மட்டும் வீடு திரும்பின. ஆசிபா திரும்பவில்லை. அவளை தேடத் தொடங்கினார் தந்தை யூசுப். பல இடங்களிலும் தேடினார். கடைசியில் அந்த பிஞ்சுக் குழந்தையின் சிதைக்கப்பட்ட உடல் மட்டுமே கிடைத்தது.

குற்றப் பின்னணி

காஷ்மீரில் உள்ள பக்கர்வால் நாடோடி சமூகத்தினர், முஸ்லீம் பழங்குடிகள் ஆவர். ஆடு, மாடு மேய்ப்பது அவர்களின் பிரதான தொழில். கத்துவா மாவட்டத்தில் பல இடங்களில் அவர்கள் தங்கள் முகாம்களை அமைத்து, மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டனர். அதில் ஒரு கிராமம் தான் ரசானா. இங்கு, பக்கர்வால் பழங்குடிகள் இருப்பது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இதனால் நடோடி பழங்குடிகளுக்கு தக்க பாடம் கற்பிக்க அவர்கள் விரும்பினர். இதற்காக அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் சிறுமி ஆசிபா.

 

கொடூரச் சம்பவம்

சிறுமி ஆசிபாவை கடத்தி கொலை செய்வது என்பது முன்கூட்டியே தீட்டப்பட்ட திட்டம். உள்ளூர் கோவிலின் தர்மகத்தா சாஞ்சி ராம் தான் இந்த கொடூர குற்றத்தின் காரணகர்த்தா. அவனுடைய மகன் விஷால் குமார் மற்றும் சிறார் குற்றவாளி ஒருவன், 2 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் சேர்ந்து, இந்த அக்கிரமத்தை அரங்கேற்றினர்.  சிறுமியை கடத்த அவர்கள் ஜனவரி 8, 9, ஆகிய இரு தினங்கள் முயற்சி செய்தும், வாய்ப்பு அமையவில்லை. ஜனவரி 10 ஆம் தேதி, சிறுமி, அந்த கும்பலிடம் சிக்கினார்.

சிக்கியவுடன் ஏற்கனவே தயாராக அவர்கள் வைத்திருந்த, பாங் மிட்டாய், அதாவது கஞ்சா மிட்டாயை சிறுமியின் வாயில் திணித்து, அவளை போதையுறச் செய்திருக்கின்றனர். பின்னர்,  வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, சாஞ்சி ராமின் திட்டத்தின்படி, கோவிலுக்குள் தூக்கிச் செல்லப்பட்ட அந்த சிறுமிக்கு clonazepam எனப்படும் மருந்தை செலுத்தி தொடர்ந்து, மயக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

இதனிடையே சாஞ்சி ராமின் மகன் உள்ளிட்ட பலர் அந்த சிறுமியை அடுத்தடுத்து பலாத்காரம் செய்திருக்கின்றனர். மயக்கம் தெளிந்த உடன் மீண்டும் மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

ஜனவரி 10 முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி, மயக்க மருந்து மட்டுமே கொடுக்கப்பட்டு, கூட்டு பலாத்காரத்தால், அந்த சிறுமி, அணுஅணுவாக சித்ரவதை செய்யப்பட்டாள். பிறகு ஜனவரி 14ஆம் தேதி, பாலம் ஒன்றுக்கு அடியில் தூக்கிச் சென்று, துப்பாக்கியால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்தனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்ட போது, தலையில் கல்லை போட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்துள்ளனர்.

அவர்களது திட்டத்தின்படி, சிறுமியின் உடலை, அருகில் உள்ள நீரோடைக்கு எடுத்துச் சென்று, கழுவி பிறகு கோவிலுக்கு கொண்டு சென்று, வைத்து விட்டு, பிறகு கார் மூலம் ஆற்றில் வீசி விடுவது என்று தான் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முன்னதாக பலாத்காரம் செய்தது தெரியக் கூடாது என்பதற்காக சிறுமியின் பிறப்பு உறுப்பை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது அந்த மிருகவெறி கொண்ட கும்பல்.

 

போலீஸ் விசாரணை

உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டதை போலீசார் கண்டறிந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி, கொலை கும்பலையும் கண்டறிந்தனர். இதனிடையே குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒரு கும்பல் கையில் தேசியக் கொடியுடனும், பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்துடனும், ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தில் பாஜக அமைச்சர்கள் 2 பேர் கலந்து கொண்ட நிலையில், முதலமைச்சராக இருந்த மெகபூபா முப்தி அந்த 2 பேரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார். ஐ.நா மன்றம் முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிறுமி ஆசிபாவுக்காக கண்ணீர் வடித்தனர்.

அந்த சிறுமி பிறந்த சமூகம் தான் அவளுக்கு எதிராக குற்றம் செய்ய தங்களை தூண்டியதாக சாஞ்சி ராமின் மகன் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லா இடங்களிலும் எனது மகளை தேடினேன், ஆனால் கோவிலுக்குள் தேடவில்லை, காரணம் கோவில் புனிதமான இடம், அங்கு யாரும் எனது மகளை வைத்திருக்க மாட்டார்கள் என நம்பினேன் என ஆசிபாவின் தந்தை யூசுப் கூறியது, கண்ணீரை வரவைத்தது.

சிறுமி ஆசிபாவின் தந்தை, ரசானா கிராமத்தில் வாங்கிய சிறிய விவசாய நிலத்தில் உடலை புதைக்க முற்பட்டபோது, அதற்கும் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அருகே இருந்த கிராமத்தில் உடல் புதைக்கப்பட்டது.  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும், என அப்போதைய முதலமைச்சர் மெகபூபா முப்தி கூறிய நிலையில், 25 ஆண்டு கால ஆயுள் தண்டனையும், 1 லட்சம் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்தும் மனித நேயம் உள்ளவர்களின் நெஞ்சில் வாழ்கிறாள் ஆசிபா.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button