ஊரடங்கு எல்லாம் மக்களுக்கு தான் போல… ஜாலியாக சைக்கிள் ஓட்டிய பிரதமர்…

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொதுவெளியில் சைக்கிள் ஓட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகளில் கடும் பேரழிவை ஏற்படுத்தியது. பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தும் நிலைக்கு அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டன. இதனால் நோய்த்தொற்று குறைந்த நிலையில், தளர்வுகள் அமலுக்கு வந்தன.
இதனிடையே நவம்பரில் உருமாறிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது முந்தைய கொரோனாவை விட பல மடங்கு வேகமாக பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்டார்ட்போர்ட் பகுதி ஒலிம்பிக் பூங்காவிற்கு சென்றுள்ள நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உடற்பயிற்சி செய்ய கொரோனா விதிகளில் அனுமதி உண்டு என்பதால் அவர் உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.