தமிழ்நாடு

ஊர்க்காவல் படையினரின் பணி அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஊர்க்காவல் படையினருக்கு பத்து நாள் மட்டுமே பணி என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஊர் காவல் படை இரவு,பகல் பாராமல் பல்வேறு காவல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதலில் 5 நாட்களாக இருந்த ஊர்காவல் படையினரின் பணி நாட்களை, பின்னர் தமிழக அரசு 10 நாட்களாக அதிகரித்து 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் காவல் துறையின் பெரும்பாலான பணிகளை செய்யும் ஊர்க்காவல் படையினருக்கு 10 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்து, மாதம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க நடவடிக்கையை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அமர்வு தமிழக அரசும், டிஜிபியும் இந்த வழக்கு தொடர்பாக 10 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button