இந்தியா
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு

டிக் டக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் பொழுதுபோக்கு செயலியான‘டிக் டாக்’ உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக தடை விதித்தது.
இதையடுத்து இந்தியர்களின் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்க இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு தரப்பில் வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் மத்திய அமைச்சகம் தரப்பில் அனுப்பப்பட்ட விரிவான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்தியர்களின் தரவு பாதுகாப்பு தொடர்பாக சீனா அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என கருதும் மத்திய அரசு, டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.