சீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…

சிக்கிம் எல்லையில் ஊருடுவ முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்துள்ளனர்.
லடாக் பகுதியை தன் வசப்படுத்த சீன ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் முகாம்கள், சாலைகளை அமைப்பது, அத்துமீறி நுழைவது போன்ற நடவடிக்கைகளில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லையில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையேயான 9வது கட்ட பேச்சுவார்த்தை இன்று முடிவுவடைந்தது. எல்லையின் பதட்டமான பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து, இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் இன்று ஊடுருவ முயன்றனர். நகுலா என்ற இடத்தில் சாலை வழியாக ஊடுருவ முயன்ற அவர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் 20 சீன வீரர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சிக்கிம் எல்லையில் சீன வீரர்களின் ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்த நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.