துண்டுச் சீட்டு இல்லாமல், மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு வரத் தயாரா? – முதலமைச்சர் பழனிசாமி சவால்

அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துண்டுச்சீட்டு இல்லாமல், விவாதம் செய்ய தயாரா என முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
கோவை சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அங்கு ராஜவீதி மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்பதற்காக, மேள தாளங்களுடன், பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை அடுத்து முதலில் ராஜவீதி பகுதியில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செல்வபுரத்திற்குச் சென்ற அவர், திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்து, ஆளுநரிடம் ஸ்டாலின் அளித்த பட்டியல் உண்மையில்லை எனக் கூறினார். மேலும் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இதை அடுத்து குனியமுத்தூரில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, துண்டுச் சீட்டு இல்லாமல், மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு வரத் தயாரா என சவால் விடுத்தார்.