மாங்காய் திருடியதற்காகவா இந்த தண்டனை… கொந்தளிக்கும் வலைத்தளவாசிகள்

மாங்காய் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்களை கட்டி வைத்து அடித்து உதைத்து மாட்டுச்சாணத்தையும் சாப்பிட வைத்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மாங்காய் திருடியதற்காக 2 சிறுவர்களை கட்டி வைத்து மாட்டுச் சாணத்தை வலுக்கட்டாயமாக தின்ன வைத்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

மகபூபாபாத்தில் உள்ள தொரூரில் வசிக்கும் சிறுவர்கள் இருவர் தங்களது வளர்ப்பு நாயை தேடி அங்குள்ள தோப்புக்குள் நுழைந்துள்ளனர். அங்கு மாமரங்கள் மாங்காயுடன் பூத்துக்குலுங்குவதை பார்த்த சிறுவர்கள், அதனை ஆர்வத்துடன் பார்த்துள்ளனர். பின்னர் மாங்காய் ஒன்றை பார்த்த சிறுவர்கள் சாப்பிட்டு இருந்துள்ளனர்.

அப்போது இவர்களை கவனித்த காவலர்களான யாக்கு மற்றும் ராமுலு ஆகியோர், சிறுவர்களை பிடித்து கைகளை கட்டி இழுத்துச் சென்று குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் மாட்டுச்சாணத்தையும் சிறுவர்களை வலுக்கட்டாயமாக உண்ண வைத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுவன் ஒருவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இரு காவலர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறுவர்கள் தாங்கள் மாம்பழம் திருடச்செல்லவில்லை என்றும் காணாமல் போன நாயைத் தேடிதான் மாந்தோப்பு காம்பவுண்டுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித் துள்ளனர்.

உண்மை என்னவென்று தெரியாமல் தோப்புக் காவலாளிகள் முரட்டுத் தனமாக சிறுவர்களை தாக்கியுள்ளதாக பலரும் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், திருடியிருந்தால் தான் என்ன… இந்த கொடூர தண்டனையா சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என இணையதள வாசிகள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.