கடனை செலுத்த முடியாத தாய்... மகளை தூக்கிய கும்பல்...

ஒரு வருடமாக சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்..
கடனை செலுத்த முடியாத தாய்... மகளை தூக்கிய கும்பல்...
Published on
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார்.

கடன் வாங்கி 3 வருடங்களைக் கடந்தும், திருப்பி கட்ட முடியாத சூழ்நிலை உண்டானது. இதனால் கடந்த கடந்த ஆண்டு தன் 16 வயது மகளை முத்துலட்சுமியின் வீட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்தார்.

வீட்டு வேலைகளை கவனித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைத்துக் கொள்ளலாம் என தாய் எண்ணியிருக்க, முத்துலட்சுமியோ, 16 வயது மகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளார்.

ஒரு வருடமாக நடந்ததை வெளியில் சொல்லாமல் முத்துலட்சுமியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு இருந்த சிறுமி, திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அவதியுற்றார்.

பின்னர் முத்துலட்சுமியிடம் சண்டை போட்ட சிறுமி, தாயிடம் செல்ல வேண்டும் என கூறினார். இதற்கு முத்துலட்சுமி மறுக்கவே, வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தப்பித்தவர், உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

முத்துலட்சுமியிடம் வேலை பார்த்த வரையிலும் சிறுமியின் தாயாருக்கு நாள்தோறும் 500 ரூபாய் சம்பளமாக சென்றது. ஆனால் 2 நாட்களாக பணம் வராததால் மகளுக்கு என்ன ஆனதோ என அவரது தாயார் பதறினார்.

இதையடுத்து சிறுமி எம்.கே.பி. அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு சென்று நடந்ததைக் கூறி போலீசாரையே அதிர வைத்தார். தன் தாயார் பணத்தை கட்ட முடியாமல் வற்புறுத்தி முத்துலட்சுமியிடம் ஒப்படைத்ததாகவும், அங்கு தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாகவும் கூறினார்.

முத்துலட்சுமியின் உறவினர் அஜித்குமார், போதை வஸ்துக்களை சிறுமிக்கு கொடுத்து உடலுறவு வைத்துள்ளார். பின்னர் நண்பர்கள் பலரையும் வீட்டுக்கு வரவழைத்து சிறுமியுடன் உறவு கொள்ள கட்டளையிட்டார்.

இதைக் கேட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியையும், அவரது உறவினர் அஜித்குமாரையும் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கிஷோர், மகேஸ்வரன் உள்ளிட்ட மொத்தம் 6 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாயார் வாங்கிய கடனுக்காக சிறுமி பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட இந்த சம்பவம் வியாசர்பாடி பகுதி மக்களை வெடவெடத்துப் போக செய்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com