மண்டை மேல உள்ள கொண்டையை மறைக்க மறந்த அதிமுக, திமுக…. இரு கட்சிகளின் தேர்தல் விளம்பரத்தில் இடம்பெற்ற ஒரே பெண்…

அதிமுக, திமுக கட்சிகளின் தேர்தல் விளம்பரத்தில் ஒரே பெண் இடம் பெற்றிருப்பது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இணையம், நாளிதழ், தொலைக்காட்சி, சுவர்கள் என திரும்பும் திசையெல்லாம் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் தான் நாம் பார்க்க முடிகிறது.

இதற்கிடையில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக,திமுகவின் விளம்பரத்தில் 700 படங்களில்  சிறிய வேடத்தில் நடித்துள்ள கஸ்தூரி பாட்டியை பயன்படுத்தி மாறி மாறி இரு கட்சிகளும் தங்களை தாங்களே கழுவி ஊற்றியதை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தற்போது அதுபோன்ற விளம்பர சர்ச்சையில் திமுக,அதிமுக கட்சிகள் சிக்கியுள்ளன. இவ்விரு கட்சிகளின் விளம்பரத்தில் ஒரே பெண் இடம் பெற்றுள்ளார். அந்த பெண்ணின் புகைப்படம் shutterstock என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் குழப்பமடைந்த இரு கட்சியினரும், தாங்கள் தான் முதலில் பயன்படுத்தி உள்ளோம் என அடிக்காத குறையாக சத்தியம் செய்கின்றனர். வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமென்றால், ‘இவ்வளவு செலவு பண்ணியும் மண்டை மேல உள்ள கொண்டையை மறைக்க மறந்துட்டோமே’ என்ற வசனம் தான் நியாபகத்திற்கு வருவதாக இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.