உதயநிதி ஸ்டாலினை எச்சரித்த மறைந்த மத்திய அமைச்சர்களின் மகள்கள்…

ஆ.ராசாவை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகன் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயையும் தரக்குறைவாக விமர்சித்தது தமிழகம் முழுவதும் கட்சி சார்பின்றி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆ.ராசாவுக்கு இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.இதே போல் தயாநிதி மாறனும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் இணைத்து தரக்குறைவாக பேசி சர்ச்சசையில் சிக்கினார். இந்த விவகாரமும் தற்போது தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி இருவரும், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்தே போய்ட்டாங்க என உதயநிதி ஸ்டாலின் பேசியது அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜின் மகள், என் அம்மாவின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய் பிரதமர் நரேந்திர மோடி என் அம்மா மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும் தான் எங்களுக்குத் தோள் கொடுத்தார்கள். உங்களது பேச்சு எங்களை வேதனைப்படுத்துகிறது’ எனக் கூறியுள்ளார்.

இதே போல் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.உதயநிதி ஜி, உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும், அதற்காக எனது தந்தையைப் பற்று பொய் பேசி அவமதிக்கும்போது நான் அமைதியாக இருக்க மாட்டேன். அரசியலுக்கு வெளியேயும் எனது அப்பாவும் மோடியும் சிறந்த நட்பைக் கொண்டவர்கள். இந்த உண்மையான நட்பை அறியும் அதிர்ஷ்டசாலியாக நீங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சு பலரின் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மறைந்த மத்திய அமைச்சரின் மகள்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மேலும் திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.