அதிருப்தியில் தொண்டர்கள்… கண்டுகொள்ளாத ‘அக்கா’…மெத்தனத்தால் தகர்ந்தே போன ‘சபாநாயகர்’ கனவு…

திமுகவின் மூத்த உறுப்பினரான சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றிப்பெற்று, அக்கட்சியின் சபாநாயகர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் கால்தடம் பதித்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். பள்ளி ஆசிரியரான இவர், அறிமுகமான 1977ம் ஆண்டே மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அதைத்தொடர்ந்து கைத்தறி அமைச்சராகவும் பொறுப்பேற்றார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

அதன்பின் தொடர்ச்சியாக அவர் பல தோல்விகளை சந்தித்திருந்த நிலையில், கடந்த 2004ம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த தேர்தலில் சுப்புலட்சுமியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் போட்டியிடாமல் அமைதி காத்து வந்த அவர், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன், தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்திருந்தார்.

இதனால் அவர் அரசியல் பிரவேசம் பண்ணமாட்டார் என ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதி திமுக முக்கிய நிர்வாகிகள் கருதியிருந்தனர். மேலும் நடப்பு தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு வாங்கி தரும்படி நிர்வாகிகள் பலரும் அவரிடம் கேட்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக சுப்புலட்சுமி மீண்டும் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடவே நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அதிருப்தியில் இருந்த அவர்கள், சுப்புலட்சுமிக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்தனர்.

இரண்டு முறை மாநில அமைச்சர், ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனும் இதைக்கண்டுகொள்ளவில்லை. சொல்லப்போனால் தன்னை எதிர்த்து போட்டியிடுபவர் புதுமுகம் அதிலும் பாஜக வேட்பாளர் தானே என தெம்பாக பிரச்சாரத்திற்கும் செல்லாமல் இருந்துள்ளார். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பாஜக வேட்பாளரான டாக்டர் சி.சரஸ்வதி, தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்.

மேலும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பெண்களுக்கான இலவச திட்டங்கள், அதிமுக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் , காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு, எழுமாத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்தது போன்ற திட்டங்களை பாஜக தனது தேர்தல் பரப்புரையில் மக்களிடம் எடுத்துரைத்து அவர்கள் மனதில் பதிவு செய்தது.

ஆனால் மெத்தனப்போக்கு காட்டிய அவர், நடப்பு தேர்தல் முடிவில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இது அங்குள்ள திமுக நிர்வாகிகளிடையே பாதிப்பு ஏற்படுத்தியதாக தெரியவில்லை. மேலும் சுப்புலட்சுமிக்கு எதிராக அவர்களே உள்ளடி வேலைகளை செய்தார்களோ என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

தேர்தல் அரசியலில் அரை நூற்றாண்டு கால அனுபவம் உடைய இவர் தேர்தல் அரசியலுக்கு புதியவரான பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்திருப்பது அவர் மீது தனிப்பட்ட முறையில் மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இருந்த வெறுப்பே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது அவரது தோல்விக்கு கட்சி தலைமையும் ஒரு வகையில் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மக்கள் மன நிலையை அறியாமல் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் திமுகவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு இப்போது 74 வயது முடிவடைந்துள்ளது. உடல்நிலை ஒத்துழைத்தாலும் 2026 தேர்தலில் 80 வயதை நெருங்கும் இவருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.
மொடக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு கேட்டு ஏராளமானோர் தீவிரமாக முயற்சிசெய்ய, வயதை மனதில் வைத்துதான் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இவர் வெற்றிப்பெற்றால் சபநாயகர் பதவி கிடைக்கும் என்று தகவல்கள் கசிந்த நிலையில், அவரது கனவு தற்போது தகர்ந்து போயுள்ளது.

Back to top button