அடேயப்பா… இவ்வளவு சொத்துகள் சேர்த்துவிட்டாரா’ நம்ம ஆளு? அதிமுகவினரை அதிரவைத்த வேட்பாளர்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும், தங்கள் மீதான குற்றப் பின்னணி என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதெல்லாம் கடந்த 10, 15 வருடங்களாகத்தான் தேர்தல் சீர்திருத்தங்களின் வழியே நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதற்கு முன்புவரையிலும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி முறைகேடாகப் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது மட்டுமேதான் மக்களுக்குத் தெரிந்திருக்குமே தவிர அப்படி அவர்கள் எவ்வளவு சொத்துகளை சேர்த்திருக்கிறார்கள் என்பதெல்லாம் சரிவரத் தெரியாது.

ஆனால், இப்போது அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்கு தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்திலேயே பதிவேற்றப்பட்டுவிடுவதால், ‘அடேயப்பா… இவ்வளவு சொத்துகள் சேர்த்துவிட்டாரா’ என்று மக்கள் மலைப்பதற்கும், `பரவாயில்லை. இத்தனை ஆண்டுகளாகப் பதவியிலிருந்தும் குறைந்த அளவில்தான் சம்பாதித்திருக்கிறார்’ என்று மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கும் வாய்ப்பு உருவாகிவிட்டது.

அப்படியே வீடு, கார் என ஏதாவது வாங்க வேண்டியிருந்தாலும், அதற்காகத் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே கடன் பெற்றதாகச் சொல்லி கடன் கணக்கைக் காட்டுகிறார்கள். இதில் சில அரசியல்வாதிகளின் சொத்துகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதும்கூட அந்த அசையா சொத்துகளின் மதிப்பு கூடி, குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்தான். அதனால்தான் கோடிக்கணக்கிலான ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தலைவர்களின் சொத்துக் கணக்கும்கூட தேர்தலின்போது வெறும் லட்சங்களுக்குள் சுருங்கியிருக்கிறது. இப்படி பட்ட சூழலில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்து தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் சொத்துமதிப்பு வெறும் 2 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்துள்ளது தொகுதி மக்களை மட்டுமின்றி சொந்த கட்சியினரையே யோசிக்க வைத்துவிட்டது.

நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கேயம் தொகுதியில் களமிறங்கியிருக்கும் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சமர்ப்பித்திருக்கும் சொத்துக் கணக்குகள் அதிமுகவினரையே தலைசுற்றவைத்திருக்கின்றன! அதுவும் வெறும் ரெண்டே வருஷத்தில் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் தாறுமாறாக சொத்துக்களை வாரி குவித்திருப்பது வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

அதிமுக வேட்பாளர் முருகவேல் என்கிற இந்த ராமலிங்கம் தாக்கல் செய்திருக்கும் வேட்பு மனுவில் கடந்த 2019-ம் ஆண்டு ஊராட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அவருடைய சொத்து மதிப்பு 12 கோடி ரூபாய் மற்றும் அவரின் மனைவி பெயரில் 2 கோடி மற்றும் கூட்டுக்குடும்பம் பெயரில் ஒரு கோடி ரூபாய்! ஆனால் தற்போது நடக்க இருக்கும் இந்த தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்கையில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு தொகை ரூ.66 கோடி வரை! கடந்த தேர்தலின்போது தனது சொத்தாகக் காண்பித்த தொகையைவிடவும் பலமடங்கு தொகையையே தற்போது காட்டியிருப்பதை கண்டு அதிமுகவினரே அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.

2019 ல் 12 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, 2021 ல் ரூபாய் 66 கோடியாக வளர்ந்து இருக்கிறது. சாதாரண ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராமலிங்கத்தின் சொத்துமதிப்பு வெறும் 2 வருஷத்தில் பலமடங்கு உயர்ந்துள்ளது எப்படி? ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும்போதே இவ்வளவு சொத்துக்கழலை வாரி குவித்திருக்கும் இவர், எம்.எல்.ஏவானால் இன்னும் எவ்வளவு சொத்து சேர்ப்பார் என தொகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.