பெருந்துறையில் அதிமுக சோலியை முடித்த சிட்டிங் எம்.எல்.ஏ… இன்ட்ரஸ்டிங் டிவிஸ்ட் வைக்கும் சர்வே ரிசல்ட்

தமிழக அரசியல் சூழ்நிலை தாறுமாறாக இருக்கிறது. மாநிலத்தை ஆளும் அதிமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் இணைந்து இன்னும் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஒரு அணியாய் நிற்க, அவர்களை எதிர்த்து திமுக தலைமையில் காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் எதிரணியாய் இருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார் என கருத்துக்கணிப்புகளும் வெளியிட்டு தேர்தல் காலத்தை இன்னும் சூடாக்கி இருக்கிறது தனியார் நிறுவனங்கள்.

“முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் குறுக்கு சால் ஓட்டி, குட்டிக்கர்ணம் போட்டு எப்படியாச்சும் தொகுதியை கைப்பற்றிட என்னென்னவோ பண்ணிப் பார்த்தார், ஆனால் கருப்பண்ணனின் வலதுகரமான ஜெ.கே.எனும் ஜெயக்குமார் களமிறக்கப்பட்டதால் திமுக கூட்டணிக்கு முடிவாகிவிட்டது. அமைச்சரின் உள்ளடியால் வெறுத்துப் போயி, ஆத்திரத்தின் உச்சிக்குப் போன தோப்பு சுயேட்சையாகிவிட்டார்.

வேட்பாளரை மாற்றி வெற்றிபெறலாம் என்ற முடிவுக்கு வந்தும் கூட, சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தோப்பு, அதிமுக வாக்கு வங்கியை சிதறடிப்பதால், கொ.ம.தே.கட்சி கே.கே.சி பாலு, அதிமுக வேட்பாளர் ஜெகே எனும் ஜெயக்குமாரை அசால்ட்டாக வீழ்த்துவார் என சர்வே முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

அமைச்சர் கருப்பணனுக்கும், தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் அதிமுக வேட்பாளர் பட்டியலில் முடிவுக்கு வந்தது. பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராகியிருக்கும் ஜெ.கே. எனும் ஜெயக்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தைப் பெற்று, தோப்புவிற்கு ஆப்பும் வைத்துவிட்டார்.

இதனால் ஷாக்கான தோப்பு தொடர்ந்து கத்திக், கதறி அழுதும் அதிமுக தலைமை கண்டுகொள்ளாததால் சுயேச்சையாக களமிறங்கிவிட்டார். தோப்பு தனித்து களமிறங்கியதால் ஜெயித்துவிடுவார் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இவருக்கு சீட்டே கொடுத்திருந்தாலும் கே.கே.சி.பாலுவிடம் தோற்றிருப்பார். ஏனென்றால் கடந்த 2011 தேர்தலில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர், பெருந்துறை சிப்காட் விவகாரத்தில் தொகுதி மக்களிடையே எதிர்ப்பை சம்பாதித்தவர். இருந்தும், இவரை வேட்பாளராக்கியது அதிமுக தலைமை. இரண்டாவதுமுறை ஜெயிக்க மாட்டார் என தொகுதி மக்களாலேயே பேசப்பட்ட இவர், பணத்தை வாரி இறைத்து ஜெயித்தார்.

இவரது ஆதரவு வட்டங்களை வைத்து பார்க்கும்போது சுமார் 10,000 வாக்குகள் மட்டுமே வாங்குவார். ஆக ஏற்கனவே அமமுகவால் சிதைந்துக்கிடக்கும் வாக்கு வங்கிகள் தற்போது தோப்புவால் மேலும் சிதறடிக்கப்படும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. இது திமுக கூட்டணிக்கு மேலும் பலமாக அமைந்துவிட்டது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் கே.கே.சி.பாலு கடந்த 2016 தேர்தலில் தனித்துக் களமிறங்கி 14,545 ஓட்டுகளை வாங்கினார், இம்முறை தி.மு.க கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது மேலும் வலிமையாக்கியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பெருந்துறை தொகுதியில் திமுக 40% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு சர்வே தெரிவித்துள்ளது. அதிமுக 35% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக களமிறங்கியுள்ள தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார் என அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேபோல பிரபல பத்திரிக்கையும் கணிப்பிலும் முன்னிலையில் உள்ளதாக கூறுகிறது.
மேலும் தனியார் தொலைக்காட்சி சர்வேவிலும் திமுக 42%, அதிமுக 37% வாக்குகள் பெறும் கூறப்பட்டுள்ளது.அடுத்ததாக ஏபிபி நெட்வொர்க் – சி வோட்டர் கருத்து வாக்கெடுப்பிலும் திமுக கூட்டணி வேட்பாளர் கே.கே.சி.பாலுவே ஜெயிப்பார் என வெளியாகியுள்ளது.