10 ஆண்டுகளாக காத்திருப்பு…. உதயமானது சூரியன்… அரசியல் கடலில் இறங்கிய ஸ்டாலின்….

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமக அமோக வெற்றிபெற்றதை அடுத்து புதிய முதலமைச்சராகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது 10 ஆண்டு கால கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது.

1953-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியன்று கருணாநிதி – தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின்.

சிறு வயதில் இருந்தே திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றத் தொடங்கினார். 14 வயதில் தொடங்கிய ஸ்டாலினின் அரசியல் பாதை, அரை நூற்றாண்டு கால அரசியலில் பல்வேறு அனுபவங்களை பெற்றிருக்கிறார்.

சினிமா, அரசியல் என்ற இரண்டு பாதைகள் கண்ணில் தென்பட்ட நிலையில் அரசியலைத் தேர்ந்தெடுத்து முழுமையாக இறங்கி களம் கண்டார்.

1968-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்காக பிரசாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு தி.மு.க.வில் பகுதி பொறுப்பாளர் என்ற பதவியை வழங்கி ஊக்கப்படுத்தினார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி.

அதன் பின்னர் 1973-ம் ஆண்டு தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினரான தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.கஸ்டாலின்.

1976-ம் ஆண்டு எமர்ஜென்சியைத் தொடர்ந்து மிசா சட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த மிசா சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தவர் மு.க.ஸ்டாலின்.

எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு எதிரான யுத்தத்தில் இளஞ்சூரியனாக உதித்தவர் மு.க.ஸ்டாலின்.

1980-ம் ஆண்டு தி.மு.க.வின் இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் ஏழு அமைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டமைத்ததால் ஸ்டாலினுக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து 1984-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கிய ஸ்டாலின் தோல்வியை தழுவினார். முதல் சட்டமன்ற தேர்தலே அவருக்கு சறுக்கலை கொடுத்தது. ஆனால் 1989-ல் நடந்த தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களம் கண்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஸ்டாலின்.

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை.

ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

2001-ம் ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராக போட்டியிட்டு இரண்டாவது முறையாகவும் வெற்றி வாகை சூடி அரசியலில் தனது செல்வாக்கை உயர்த்தி கொண்டார்..

ஆனால் 2002-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வநதார்.. அதனால் எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்த ஸ்டாலின், மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

2006-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றார் ஸ்டாலின்.

இவரது கடின உழைப்பை கண்டு வியப்படைந்த திமுக தலைவர் கருணாநிதி, 2008-ம் ஆண்டு தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.

ஸ்டாலின் மேயராக இருந்த சமயத்தில் பல நலத்திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதில் முக்கியமான திட்டம் சிங்காரச் சென்னை.

சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ், 9 மேம்பாலங்கள், 49 குறும்பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், மெரினா கடற்கரை அழகு படுத்துதல், சாலை விரிவாக்கம் என அனைத்துமே அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக அமைந்தன.

ஆட்சி நிர்வாகம், சமூக மேம்பாடு பங்களிப்புக்காக அண்ணா பல்கலைக்கழத்திடம் இருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலினின் பொது சேவையை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் காமன் வெல்த் சார்பில் கெண்டக்கி கர்னல் விருது வழங்கப்பட்டது.

தந்தையை தலைவராகவே போற்றியவர் மு.க.ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகன் என்ற போதிலும், பொதுவெளியிலும், கருணாநிதியை தந்தை என்று சொல்லிக் கொள்வதை விட, தலைவர் என்றே அழைத்து வந்தார்.

2011 ஆம் ஆண்டு அனைத்து சாதிக்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தார் கருணாநிதி. ஆனால் திமுக அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டால் திமுக படுதோல்வியை சந்தித்ததுடன் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது. ஆனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற ஸ்டாலின் மேற்கொண்ட வியூகம் கைகொடுக்கவில்லை. திமுக தலைமையில் கூட்டணியை கட்டமைப்பதில் கோட்டைவிட்டதாலும் சிறிய கட்சிகளை உதாசீனப்படுத்தி வெளியெற்றியதாலும் 2016 ல் முதலமைச்சராக வேண்டிய ஸ்டாலின் கொளத்தூர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

1 சதவீத வாக்கு வித்தியாசத்தால் முதலமைச்சர் பதவி ஸ்டாலினுக்கு எட்டாக்கனியானது. அவர் எடுத்த தவறான முடிவால் திமுக ஆட்சிக்கு வரமுடியாததுடன் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வித்திட்டது. இருப்பினும் ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் தமிழக மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு தி.மு.க. பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.

பின்னர் 2018-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து திமுக எனும் மாபெரும் இயக்கத்தை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் ஸ்டாலின்.

2019 நாடாளுமன்ற தேர்லிலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்லப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதல் ஆளாக பிரகடனம் செய்தார் ஸ்டாலின். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பெற்று சந்தித்த அந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக முன்எப்போதும் இல்லாத வரலாற்று வெற்றியை ருசித்தது.

பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாத நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் 100 சதவீதம் தன்னை முழுமைப்படுத்திக் கொண்டு மக்கள் தொண்டாற்றினார் ஸ்டாலின்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும், பொதுமக்களை சந்தித்து பல்வேறு குறைகளை கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்.

திமுக தலைமையில் 2019 ஆண்டு அமைக்கப்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. எந்த கட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறாதவாறு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வெற்றி கண்டார் ஸ்டாலின். இந்த தேர்தலில் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப்போராரு என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

2021 தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்த 100 நாளிலேயே மக்களின் குறைகளை தீர்த்து வைக்கிறேன் என வெற்றி பெறுவதற்கு முன்பே உத்தரவாதம் வழங்கினார்.

மத்திய அரசு செயல்படுத்திய பல்வேறு சட்டங்கள், பொதுமக்களுக்கு எதிராக இருப்பதை எண்ணி அதனை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்து போராட்டத்தை நிகழ்த்தினார்.

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தமிழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதோடு மட்டுமல்லாமல், மதம் சார்ந்த கலவரங்களுக்கு தமிழகம் அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருப்பவர்.

பெரியாரின் பகுத்தறிவு கொள்கையையும், கருணாநிதியின் சமத்துவ போதனையையும் உயிராகக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

கட்சியில் அடிமட்டத் தொண்டனாக சேவையைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்த ஸ்டாலின் இன்றைக்கு மிகப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

விடியலைத் தரப்போவது உறுதி என்று பிரச்சார கூட்டணிகளில் முழங்கி வந்த மு.க.ஸ்டாலின் சுதந்திர இந்தியாவில், தற்போதைய தமிழகத்தின் 8-வது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தமிழக முதலமைச்சராக அரியணையில அமர இருக்கும் ஸ்டாலின் தாம் கூறிய படி தமிழக மக்களுக்கு விடியல் தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

Back to top button