காந்தி, காமராஜர், ஜவஹர்லால்நேரு, அம்பேத்கர் இவர்கள் வரிசையில் பின்னாட்களில் புதிய புதிய தலைவர்களின் வரலாறு, பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக அரசியல் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் இவர்களின் பெயர், வரலாறு போன்றவை பாடப்புத்தகங்களில் இடம் பெறப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் 7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கவர்ச்சி நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றிருப்பது இந்தியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவாலா பாடலில் கால்களையும், கைகளையும் விரித்து ஆட்டம் போட்ட தமன்னாவை கல்வி பாட சாலையில் மாணவர்கள் அறிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, வேங்கை, வீரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்தார்.
தேவி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி நடித்த தமன்னா, சமீபத்தில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் மூலம் இளைஞர்களை கிறுகிறுக்க வைத்தார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளியான அரண்மனை 4 படத்திலும் அச்சோ அச்சோ பாடலுக்கு தாராள கவர்ச்சி காட்டி தன் மார்க்கெட்டை சரிய விடாமல் காத்துக் கொண்டார்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சிந்தி என்ற தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்திட்டத்தின் கீழ் தமன்னா குறித்து சில விவரங்கள் குறிப்பிடப்பட்டது.
தமன்னா பிறந்த தேதி, அவர் நடித்த படங்களின் விவரம் இவற்றுடன் தமன்னாவின் நடிப்பு பற்றியும் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகத்தில் ரன்வீர் சிங் உள்ளிட்ட சிந்தி நபர்கள் பற்றியும் இருந்தாலும் கூட, தமன்னா குறித்து இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில் பெற்றோர் தரப்பில் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் விடுதலைக்காக உழைத்த பெரும் தலைவர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், அரசியல் புள்ளிகள், கணித மாமேதைகள், தமிழ்ப்புலவர்கள் என இவர்களைப் பற்றி அறிவை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகள் தமன்னாவை பற்றி என்ன கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதே பெற்றோர்களின் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.