டாக்டரின் மனைவியை கொடூரமாக குத்திக்கொன்ற இளைஞன்.. காரணம் என்ன?

குழந்தைகளுடன் வீட்டில் தனித்திருந்த பெண்ணை, அங்கு கார்ப்பென்டராக வேலை பார்த்த ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் லக்னோவில், அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள போஷ் கோம்தி நகரில் வசிப்பவர் ஹர்ஷ் அகர்வால். மருத்துவரான இவருக்கு மனைவி ருச்சி அகர்வால் மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மாடி வீட்டில் வசித்து வரும் ஹர்ஷ் அகர்வால், தரை தளத்தில் உள்ள வீட்டின் உட்பகுதியை அலங்கரிப்பதற்காக கார்பென்டர்கள் இருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

ஆனால் அவர்கள் யார் உள்ளிட்ட முழு விவரத்தையும் விசாரிக்காமல் டாக்டர் குடும்பம் இருவரையும் வேலையில் அமர்த்தி, தினக்கூலியை வழங்கி வந்துள்ளனர்.

இதனிடையே , ருச்சி வீட்டின் செல்வ செழிப்பை கவனித்து வந்த கார்பென்டர் குல்ஃபம் என்பவன், அடிக்கடி முன்பணம்கேட்டு தொல்லை செய்துள்ளான். ஆனால் ருச்சி பணம் தராமல் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சம்பவத்தன்று, ஹர்ஷ் அகர்வால் வீட்டில் இல்லாததை அறிந்து, வீட்டுக்குள் நுழைந்த குல்ஃபம், தொழில் தொடங்க உள்ளதாக கூறி முன்பணம் கேட்டு நச்சரித்துள்ளான்.
இதனை அங்கிருந்த ருச்சியின் குழந்தைகளும் கவனித்து வந்துள்ளனர்.

இதில் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற, குல்ஃபம், கையில் கிடைத்த கத்தியை எடுத்து ருச்சியின் மார்பில் மாறி மாறி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.

அதன்பின்னர் ரத்த வெள்ளத்தில் தாய் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்ட, குழந்தைகள் தந்தையை அழைத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்பின் ருச்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

மேலும், கத்திக்குத்து இதயம் வரை ஊடுறுவியதால் அதிக ரத்தம் வெளியேறி அவர் உயிரிழக்க நேர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீார், பெண்ணை கொலை செய்த இளைஞரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.