தம்பிக்கு திருமணம்.. எனக்கு இல்லையா.. ஆத்திரம் தாளாமல் தந்தையை கொன்ற மகன்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே, தனக்கு திருமண ஏற்பாடு செய்யாமல் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு ஏற்கனவே மணமாகியுள்ளது. இந்நிலையில் நடுவில் உள்ள மகன் சீனிவாசனை கண்டுக்காமல், சந்திரசேகர் தன் இளைய மகனுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். தனக்கு திருமண ஏற்பாடு செய்யாமல், தம்பிக்கு பொண்ணு தேடுவதை கண்டு மனம் வருந்திய, சீனிவாசன், அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்துள்ளார்.

மேலும் சண்டையின்போது, சொத்தை பிரித்து வழங்குமாறும் முறையிட்டுள்ளார். ஆனால் சந்திரசேகர், தர முடியாது என உறுதியாக கூறிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், தந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் சண்டையிட்ட சீனிவாசன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

படுகாயமுற்றிருந்த சந்திரசேகரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது மகன்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.