பைக்கில் சென்ற பெண் காவலர் கழுத்திலிருந்த செயினை பறித்த கொள்ளையர்கள்.! படுகாயமடைந்த காவலர்.!

 

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவலரிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ரேகா. இவர் நேற்று மாலை பணிமுடித்து சுமார் 7 மணியளவில் ஆவடி பருத்திப்பட்டில் உள்ள தங்கையின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காவலர் ரேகா ஐ.சி.எஃப் சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் காவலர் ரேகாவின் கழுத்திலிருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் காவலர் ரேகா நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு முகம், கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவலர் ரேகா அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.சி.எஃப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தைச் சுற்றி சி.சி.டி.வி கேமரா ஏதேனும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண் காவலரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Back to top button