இளம் மனைவி நடத்தையில் சந்தேகம்… மணமான ஒரே மாதத்தில் தம்பதி உயிரிழந்த சோகம்…

இளம் மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவர், அவரை அடித்துக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்பாளையம் கோராத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்.  இவருக்கு சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த மோனிஷா என்ற 19 வயது இளம்பெண்ணுடன் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின் இருவரும் கோராத்துக்காடு பகுதியில் வசித்து வந்த நிலையில், தங்கராஜ் அவரது மனைவி மோனிஷா நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் மோனிஷாவும் அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் இரவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கராஜ் மனைவியை அடித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் தங்கராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. வீட்டிற்குள்ளும் எவ்வித சத்தமும் கேட்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவர்களது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் சத்தம் வராததால், கதவை உடைத்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தங்கராஜ் கேபிள் ஒயரில் தொங்கிய நிலையிலும், மோனிஷா காயங்களுடனும் தரையிலும் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்து உடலை கைப்பற்றிய காவலர்கள், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.