10 ஆண்டு பகை…ரயில் நிலைய வாசலில் கொல்லப்பட்ட தொழிலாளி…

கோவில்பட்டியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் 2-வது தெருவை சேர்ந்த  சுடலைபாண்டியன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவில்பட்டி ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில் சென்றபோது மர்மநபர் ஒருவர் அவரை கம்பியால் தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுடலைபாண்டியன் உயிரிழந்தார்.தகவல் அறிந்து டி.எஸ்.பி. கலைக்கதிரவன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணை  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரயில் நிலைய பகுதியில் போளி வியாபாரம் செய்து வந்த சுடலைபாண்டியனுக்கும், ரயில்வே போர்டராக இருந்த கோவில்பட்டி புதுக்கிராமம் வசந்த நகரைச்சேர்ந்த முத்துபாண்டிஎன்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், சுடலைபாண்டியன், முத்துபாண்டியை அரிவாளால் தாக்கியுள்ளார். இதையெடுத்து இரு தரப்பில் உள்ள பெரியவர்கள் சமதானம் செய்துள்ளனர்.அதன் பின்னர் நண்பர்களாக பழகினாலும், முத்துபாண்டி முன்விரோதத்துடனே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று இருவரும் மதுபானம் அருந்தச் சென்ற நிலையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுடலைபாண்டியன் ரயில் நிலைய நுழைவாயில் பகுதிக்கு வந்தபோது அங்கு கிடந்த கம்பியை எடுத்த முத்துபாண்டி தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்தில் சுடலைபாண்டியன் உயிரிழந்துள்ளார்.  இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கிழக்கு போலீஸார், முத்துபாண்டியை கைது செய்தனர்.

 

Back to top button