திருநெல்வேலி மாவட்டம் மருதகுளத்தில் உள்ள ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜூலை 1-ம் தேதி திடீரென மோதல் சம்பவம் நிகழ்ந்தது.
பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் பொன்னாகுடியைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் ஜூலை 1-ம் தேதி மதியஉணவு இடைவேளையின் போது வகுப்பறையின் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு தரப்பு மாணவர்கள் அதிரடியாய் வந்து மாணவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பள்ளி முழுவதும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.
ஆனால் அதற்குள் பொன்னாகுடியைச் சேர்ந்த மாணவர்கள் இருவரில், ஒருவருக்கு வலது தோள்பட்டையில் பலத்த அடி விழுந்தது. மற்றொரு மாணவனுக்கு முதுகிலும், முகத்திலும் அடி விழுந்தது.
இதில் கடுமையான ரத்தம் வெளியேறிய நிலையில் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டான். சாதிய ரீதியாக நடந்த இந்த மோதல் சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனிதனை மிருகமாய் மாற்றும் சாதியப் பேய், தற்போது கோயிலாய் விளங்கும் பள்ளி வரை நுழைந்திருப்பது பலரையும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது.