மாப்பிள்ளைக்கு போட்டோ அனுப்பிய காதலன்.. கடையை துவம்சம் செய்த காதலி குடும்பம்

திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலனின் கடையை, காதலி குடும்பத்தார் அடித்து நொறுக்கிய சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள இலுப்பையூரணியை சேர்ந்தவர் முத்துபிரகாஷ். இவர் தூத்துக்குடியில் சிறிய ரக உணவகம் ஒன்று நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரும் திட்டங்குளத்தை சேர்ந்த ராஜலட்சுமியும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் ராஜலட்சுமி வீட்டுக்குத் தெரிந்ததும், பெண் வீட்டார் ராஜலட்சுமிக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துபிரகாஷ், காதலியுடன் எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் திருமணம் நின்றுபோய் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், முத்துபிரகாஷ் ஓட்டலையும், அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர். ஆனால் முத்துபிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பெண்ணின் சகோதரர் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.