வீட்டை விட்டு பணத்துடன் வெளியேறிய சிறுவன்… காத்திருந்து பறித்து சென்ற காவலர்… வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்…

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பெற்றோருடன் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு சென்னைக்கு வந்த பள்ளி மாணவனிடம் இருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை போலீசார் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம். இவரது 17 வயது மகனான கிங்ஸ்டன் கிஷோர் பெற்றோருடன் சண்டையிட்டு விட்டு, 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து மூலம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலைய காவல்நிலைய குற்றப்பிரிவு முதல்நிலை காவலர்கள் வேல்முருகன் மற்றும் அருண்கார்த்திக் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, மாணவனிடம் இருந்த பணத்தை காவலர்கள் இருவரும் பறித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன மாணவன் தனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவனை தேடி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த தந்தை அந்தோணி செல்வம், கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவலர்கள் இருவரையும், மேல் விசாரணைக்காக மதுரவாயல் உதவி ஆணையரிடம் அனுப்பி வைத்துள்ளார். ஒரு பள்ளிச் சிறுவன் வைத்திருக்கும் பணத்தை பாதுகாக்க வேண்டிய காவலர்களே பறித்துச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேயந்த கதையாக அரங்கேறியுள்ள இதுபோன்ற சம்பவங்கள் தான் காவல் துறை மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்குகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Back to top button