‘பண்டிகையை கொண்டாடுங்கலே...’ எங்கு இருக்கிறது கைலாசா? விரைவில் அறிவிப்பு...

நித்யானந்தா வசித்துவரும் கைலாசா நாட்டிற்கு எவ்வாறேனும் சென்றாக வேண்டும் என இளைஞர்கள் பலரும் விருப்பம் கொள்வதுண்டு. அதே நேரம் காவல்துறையும் நித்யானந்தாவின் இருப்பிடத்தை சல்லடை போட்டு தேடி வருவதுண்டு. அவ்வாறானவர்களின் காத்திருப்புக்கு முடிவு வரவிருக்கிறது. அது என்ன?
‘பண்டிகையை கொண்டாடுங்கலே...’ எங்கு இருக்கிறது கைலாசா? விரைவில் அறிவிப்பு...

ஒரே வீடியோ... தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் படுபேமஸ் ஆனவர் நித்தியானந்தா. பெங்களூரில் சிறிய அளவில் ஆசிரமம் நடத்திய நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டையே உருவாக்கியதாகவும், அங்கு தன் சிஷ்ய கோடிகளுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனக்கென ஒரு நாடு, தங்கள் நாட்டுக்கென தனி கரன்சி போன்றவற்றை அறிமுகப்படுத்திய நித்யானந்தா, ஆன்மிகம் சார்ந்த பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிரபல நடிகை ரஞ்சிதா தொடங்கி, ஏராளமான இளம்பெண்கள், இளைஞர்கள் பலரும் கைலாசாவில் கூடியிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த இளைஞர்கள், ஒரு முறையேனும் கைலாசாவுக்கு சென்றாக வேண்டும் என கிண்டலாக பதிவிட்டு வந்தனர்.

இதற்கு நித்யானந்தாவும், இந்தியர்கள் கைலாசா குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல கடத்தல் வழக்கு, பாலியல் புகார் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி இந்தியாவை விட்டு தப்பிய நித்தியானந்தாவை, பிடித்தே ஆக வேண்டும் என அரசு ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு பக்தர்கள், பொதுமக்கள், அரசு ஆகியோரின் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு வழியாக முடிவு வரவுள்ளது. கைலாசா நாடு என்ற வகையில், நித்யானந்தாவின் சீடர்கள், அவ்வப்போது ஐக்கிய நாட்டு சபையில் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில், ஐக்கிய நாடு உறுப்பினர்கள், கைலாசா நாட்டினர் மீது குற்றச்சாட்டுக்களை வைத்ததாக கூறப்படுகிறது. இல்லாத நாட்டில் இருப்பது போல கற்பனையை உருவாக்கி பலன் என்ன? என கேள்விகள் எழுந்தது.

இதன் காரணமாக கைலாசா இருக்கும் இடம் வரும் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என அந்நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. குரு பூர்ணிமா விழா அன்று, நேரலையில் வரும் நித்யானந்தா, தான் இருக்கும் இடத்தை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

இதைக் கவனித்த நெட்டிசன்கள், பல ஆண்டுகள் காத்திருந்ததற்கு பலன் கிடைக்கப் போகிறது என்றும், கைலாசா எங்கு இருந்தாலும், உடனடியாக சென்றாக வேண்டியதுதான் என்றும், கேலியாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com