சென்னைதமிழ்நாடு

பொய்யான பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பொய்யான பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென, புகார் அளித்த பெண்ணுக்கு சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 2 குடும்பத்திற்கும் ஏற்பட்ட நிலப்பிரச்சினை காரணமாக, சந்தோஷின் குடும்பம் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சந்தோஷ் தனது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

95 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு அதன் பின்னர் ஜாமீன் கிடைத்தது. இதனை தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனையில் சந்தோஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என தெரியவந்ததையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தன் மீது பொய் புகார் அளித்து சிறையிலடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொய் புகாரில் தான் சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை தான் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தன்னுடைய வழக்கு செலவாக இதுவரை சுமார் 2 லட்சம் வரை செலவழித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷ் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்து அவருடைய எதிர்காலத்தை பாழாக்கியதாக கூறி, அவருக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொய் புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button