பாஜக முதலமைச்சரின் பொதுக் கூட்ட மேடையை சூறையாடிய விவசாயிகள்!

ஹரியானாவில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக முதல்வர் பங்கேற்ற விழாவில் விவசாயிகள் புகுந்து சூறையாடிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் 45 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இது வட இந்தியா அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், கர்னால் மாவட்டம் கைமலா கிராமத்தில் கிஷான் மகா பஞ்சாய்த்து நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருந்தார். இது வேளாண் சட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்குவதாக இருந்தது. இந்நிகழ்ச்சி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகளை கிராம எல்லையில் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். ஆனால் அதனை தகர்தெறிந்து நுழைந்த விவசாயிகள் நிகழ்ச்சி மேடையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த அலங்கார விளக்குகள், நாற்காலிகள் சூறையாடப்பட்டன.
இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்து, போராட்டக்காரர்களை கலைத்தனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் கலவரம் காரணமாக, முதல்வர் மனோகர்லால் கட்டாரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதற்கிடையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை தங்களது போராட்டம் திரும்ப பெறப்படாது என அறிவித்தவாறு கடும் மழை, பனியை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.