அரியானா உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு
விவசாயிகள் போராட்டத்தின் மையமாக இருக்கும் அரியானாவில் பாஜக தோல்வியை தழுவி இருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

விவசாயிகள் போராட்டம் எதிரொலியால் ஹரியானாவின் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும், ரேவாரி மாவட்ட நகராட்சி, சம்ப்லா, தாருஹேரா, ஹிசாரின் உக்லானா நகராட்சிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற்றது.
ஒருமாதமாக வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக ஹரியான விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜக- ஜேஜேபி கூட்டணிவை சந்தித்தது.
இதில் பஞ்ச்குலா மாநகராட்சியில் மட்டுமே பாஜக வென்றது. அதுவும் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் இந்த வெற்றி கிட்டியது. அம்பாலாவில் காங்கிரஸ் கட்சியை பின்னால் தள்ள முடிந்ததே தவிர பாஜகவால் வெற்றிப் பெற முடியவில்லை. அங்கு ஹரியானா ஜன்கித் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிப் பெற்றார்.
சோனிபட்டில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. அதேபோல் நகராட்சிகளுக்கான தேர்தலில் ரேவாரியில் மட்டுமே பாஜக வென்றது. சம்ப்லா, தாருஹேரா, ஹிசாரின் உக்லானா நகராட்சிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். விவசாயிகளின் போராட்டமே இத்தகைய பின்னடைவுக்கு காரணம் என பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் நடைபெற்ற சோனிபட் இடைத்தேர்தலில் ஆளும் பாஜக- ஜேஜேபி கூட்டணி தோல்வியடைந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு எதிராக வந்துள்ளதால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.