ஒரே பாத்ரூமில் இரண்டு பேரா?… சங்கடமா இருக்காது…. உ.பி. அரசு அதிகாரிகள் வேற லெவல் யோசனை…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உ.பி. அரசு அதிகாரிகள் கழிவறை அமைத்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு நாடு முழுவதும் வீடுகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி  90% இந்தியர்கள் கழிப்பறை வசதி பெற்றுள்ளார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் பல இடங்களில் இந்த கழிப்பறைகள் அனைத்தும் சரியாக இயங்கவில்லை என எதிர்க்கட்சிகள் புகாரளித்து வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சலாதாவா தொகுதியின் கீழ் வரும் பியூரா கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் அதிகாரிகள் கழிவறை அமைத்துள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதுமாக பயன்படுத்த எண்ணிய அவர்கள் வித்தியாசமான முறையை கையாண்டனர்.

அதாவது ஒரே கழிவறையில் இரண்டு குளோசெட்டுகளை அருகருகே அமைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.