அறிமுகமாகிறது ‘ஆப்பிளின்’ தானியங்கி எலக்ட்ரிக் கார்…

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் விரைவில், நவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

உலகளவில் உள்ள பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள், சுற்றுசூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார் உற்பத்திகளை தவிர்த்து வருகின்றன. மேலும் தங்களது கவனத்தை தொழில்நுட்பம் சார்ந்த எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தி வருகிறது.

இதேபோல் ஐபோன், ஐமேக் போன்ற விலையுயர்ந்த செல்போன், கணினிகளை உருவாக்கி வரும் ஆப்பிள் நிறுவனமும், தானியங்கி கார்களை உருவாக்குவதை தனது கனவு திட்டமாக வைத்திருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில்  போடப்பட்டிருந்தது. தற்போது டெஸ்லா நிறுவனம் தயாரித்த தானியங்கி எலக்ட்ரிக் கார் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனது கனவு திட்டத்தை முழுமைப்படுத்தும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது.

முன்னதாக  ஆப்பிள் நிறுவனம் தனது தானியங்கி எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் ஆட்டோமோபைல்  நிறுவனத்தின் உதவியை நாடியது. அதன் கிளை நிறுவனமான கியாவுடனும்  கார்களுக்கு தேவையான பாகங்களை உருவாக்கி தரும்படி பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால் ஒரு ஒப்பந்த தயாரிப்பாளராக இருக்க விரும்பவில்லை என கூறி ஹூண்டாய் நிறுவனம் அந்த வாய்ப்பினை நழுவவிட்டது.

இந்த நிலையில் கார் பாகங்களை உற்பத்தி செய்து, அதனை ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்ய எல்ஜி மற்றும் மேக்னா ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி ஆப்பிள் பிராண்டில் வெளியாக உள்ள தானியங்கி காருக்கான பவர்டிரைன்-ஐ எல்ஜி நிறுவனம் உருவாக்க உள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து காருக்கு தேவையான அனைத்து பாகங்களையும் தயாரிக்க கனடாவின் மேக்னா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்னும் சில தினங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, பணி முழு வீச்சில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Back to top button