மம்தா பிரச்சாரத்தில் ஈடுபட 24 மணி நேரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை..!!

தேர்தல் ஆணையத்தின் தடையைக் கண்டித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலானது 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4கட்ட வாக்குபதிவானது நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட வாக்குபதிவு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மத ரீதியாக வாக்குகளைச் சேகரிக்கும் வகையில் மம்தா பானர்ஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் இது குறித்துத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மம்தா விளக்கமளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மம்தா பானர்ஜி விளக்கம் அளித்த நிலையில் மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று கூறி 24 மணி நேரத்திற்கு மம்தா பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

அதன்படி நேற்றிரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவைக் கண்டித்து மம்தா தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

Back to top button