ஓய்வு பெற்ற அர்ச்சகரை மீண்டும் பணியமர்த்தியது சரியல்ல – சந்திரபாபு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை அர்ச்சகரை மீண்டும் பணியமர்த்தியது சரியல்ல என தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கு இம் மாதம் 17 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயது மூப்பு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை அர்ச்சகரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டது தவறான முன்னுதாரணம் என்றும், அந்த அர்ச்சகர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, மகாவிஷ்ணு உடன் ஒப்பிட்டு பேசியுள்ளதாகவும் கூறினார். .