தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக் கொண்டார் பிரதமர் மோடி…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பிரதமர் மோடி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதை கடந்த இணை நோய் உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் 5 வார இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பிரதமர் செலுத்திக் கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிஷா சர்மா என்ற செவிலியர் பிரதமர் மோடிக்கு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்தியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், தகுதியுடைய அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.