நக்சலைட்டுகளிடம் பிணை கைதியாக இருந்து வீரர் விடுவிப்பு..!!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளிடம் பிணை கைதியாக இருந்த சி.ஆர்.பி.எப் வீரர் விடுக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ஆம் தேதி பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணமடைந்தனர்.

நக்சலைட்டுகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. தாக்குதலின் போது வீரர்கள் சிலர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் வெளியிட்டனர். கடத்தப்பட்ட வீரர் ‘கோப்ரா’ கமாண்டோ படை பிரிவை சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வீரரை பத்திரமாக மீட்டுத் தருமாறு அவரின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து நக்சலைட்டு வெளியிட்ட அறிக்கையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு படைவீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதையடுத்து, மத்தியஸ்தர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வீரர் ராகேஷ்வர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு படை தரப்பு கூறுகையில், வீரர் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் என்றும் தெரிவித்துள்ளது.

வீரர் மீட்புக்காக காத்திருந்த அவரின் குடும்பத்தினர் இந்த செய்தி அறிந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர். மேலும், தம் வாழ்விலே இந்த நாள் மிகச் சிறந்த நாள் என ராகேஷ்வர் மனைவி பேட்டி அளித்துள்ளார்.