டோல்கேட்டுக்கு கொடுக்கிற காசுக்கு தனியா ரோடே போடுவோம் நாங்க…

கர்நாடகவில், சுங்கக்கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள், தங்களுக்கென தனியே சாலை அமைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹெஜமாடி கிராமத்தை சேர்ந்த மக்கள், வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டது. ஆனால்  பாஸ்ட்டேக் முறை அறிமுகமானதும் இந்த பாஸ்கள் பயன்பாடற்று போயுள்ளது. இதனால்  கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டதால், அடிக்கடி கிராம மக்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

அண்மையில் அந்த கிராமத்து மக்களுடன் சென்ற 4 பேருந்துகளுக்கு சுங்கக்கட்டண விலக்கு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளுக்கு சுங்கச்சலுகை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சரி என அதிகாரிகள் உறுதியளித்தும், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட தீர்மானித்த மக்கள், மங்களூர் – உடுப்பி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே, தங்களுக்கென தனியாக ஒரு சாலையை அமைத்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனது.