சட்டப்பேரவைக்குள் நுழைய முடியல!! ஒரு காலத்தில் மாநிலத்தையே ஆட்சி செய்த காங்கிரசின் பரிதாப நிலைமை…

ஒரு காலத்தில் மேற்குவங்கத்தில் ஆட்சியில் இருந்து இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் பூஜ்ஜியமானது.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. பாஜக 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். சட்டபேரவைத் தொகுதியில் தோல்வி அடைந்தாலும், முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்கிறார்.

சஞ்சுக்தா மோர்ச்சா என்ற பெயரில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. ஐஎஸ்எஃப் வேட்பாளர் நவ்ஷாத் சித்திக், பங்கார் தொகுதியில் வெற்றி பெற்றார். இதுவரை பேரவையில் இடம்பெற்று வந்த இடதுசாரி வேட்பாளர்கள் இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதே நிலைமைதான் காங்கிரசுக்கும்.

இது மேற்கு வங்க வரலாறு! இந்தியாவின் பெரிய மாநிலங்களில் மேற்கு வங்கம் குறிப்பிடத்தக்கது. மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும்.

உத்தரப்பிரதேசம் மிக அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம். அம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 403. அடுத்த இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 294 ஆகும்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 1952-ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது முதல் 1977-ஆம் வரை 25 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்தது. சித்தார்த்த சங்கர் ரே உட்பட 5 பெருந்தலைவர்கள் முதலமைச்சர்களாக இருந்தார்கள்.

அதன்பின் 1977-ஆம் ஆண்டில் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. 1977 முதல் 2011 வரை 34 ஆண்டுகள் இடதுசாரிகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர். ஜோதிபாசு 23 ஆண்டுகளும், அதன்பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா 11 ஆண்டுகளும் முதலமைச்சர்களாக இருந்தனர். நந்திகிராம், சிங்கூர் நிலம் எடுப்பு பிரச்சினை காரணமாக இடதுசாரிகள் ஆட்சியை இழந்தனர்.

2016 வரை எலியும் பூனையுமாக இருந்த இடதுசாரிகளும், காங்கிரசாரும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். மார்க்சிஸ்ட் 137 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும் போட்டியிட்டன. மீதமுள்ள இடங்கள் பிற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. மொத்தமுள்ள 294 இடங்களில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களையும், பாரதிய ஜனதா 77 இடங்களையும் வென்றுள்ளன. மீதமுள்ள இரு இடங்களை சுயேட்சைகள் பிடித்துள்ளனர். ஆனால், 292 இடங்களில் ஓர் இடம் கூட இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் மாநிலத்தையே ஆட்சி செய்த கட்சிகள், இன்று சட்டப்பேரவைக்குள் நுழையவே முடியவில்லை… என்ன கொடும சரவணன்!!

Back to top button