இராமருடன் போரிட துணிந்த எவரும் மோசமான விளைவுகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.! -மமதாவுக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை.!

நடைபெறும் 5 மாநில தேர்தல்கள் இந்திய அரசியல் அரங்கில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் மேற்குவங்கம்,கேரளா,தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதோடு இந்த மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கொடி காட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேற்கு வங்கம்,தமிழகம்,கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்த முறை எப்படியும் நுழையவேண்டும் என பாஜக மும்முரமாக இருக்கிறது. அதிலும் மேற்குவங்கத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்ற நிலையில் அங்கு என்ன செய்தாவது ஆட்சியை பிடிக்க கடும் முயற்சி செய்கிறது.இதற்காக மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களையும், அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பேனர்ஜி மீது மதரீதியான தாக்குதலையும் மேற்கொண்டு வருகிறது.

கடந்த மாதம் மோடியும் மமதாவும் ஒன்றாக கலந்துகொண்ட அரசு விழாவில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியதற்கு மமதா கோவத்தோடு வெளியேறினார் என்று கூறி மமதா ராமருக்கு எதிரானவர் என பாஜகவினர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் கூறிவருகின்றனர்.

இந்த பேச்சுக்களை தொடர்ந்து தற்போது பாஜகவின் முக்கியமான தலைவரும் உத்தரபிரதேசத்தின் முதல்வருமான யோகி ஆதித்யநாத் மமதாவை நோக்கி கூறியுள்ள கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேற்குவங்கத்தில் உள்ள ஜல்பைகுறியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது “நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னால் சகோதரி மமதா மிகவும் கோப்படுகிறார். நீங்கள் அப்படி கூறியதற்காக உங்களை ஜெயிலில் அடைப்பார். அவருக்கு பா.ஜ.க.அல்லது என்னால் எரிச்சல் வரலாம். ஆனால் ஏன் ஜெய் ஸ்ரீ ராமரால் வருகிறது என தெரியவில்லை.இராமருடன் போரிட துணிந்த எவரும் மோசமான விளைவுகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் அவலநிலை உறுதி. மே 2ம் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திடமிருந்து மேற்கு வங்கம் விடுதலை பெறும்” எனக் கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.