அரசியல்தமிழ்நாடு

பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் இந்தியத் தேர்தல் ஆணையம் -மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டு ;

பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு துணை போகும் பாரபட்சமான நடவடிக்கையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 80 வயதிற்கு மேற்பட்டோர் எல்லாம் மூத்த குடிமக்கள் என்றும், அவர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்யலாம் என்றும், தேர்தல் ஆணையம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூறி இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் பீகார் தேர்தலுக்கு முன்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி, 65 வயதிற்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்று திடீரென்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை அடுத்து, 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற அறிவிப்பைக் கைவிட்டு, மீண்டும் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் பதிவு செய்யும் வாய்ப்பு என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த “பீகார் மாடல்தான்”, பீகாரில் ஜனநாயகத்தின் சுவாசக்காற்றை மாசு படுத்தி, நாடு முழுவதும் இன்றைக்கு பா.ஜ.க.வின் வெற்றி குறித்து மிகப்பெரிய அய்யப்பாட்டை பொதுவெளிக்குக் கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமைந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இப்படியொரு “பீகார் மாடல் தேர்தல் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்” என்றுதான், தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் வலியுறுத்துவதாகவும்,

ஒவ்வொரு தேர்தலிலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என்று வாக்களிக்க வராத 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை, ஜனநாயக விரோதமாக பா.ஜ.க.வும் – அதன் கூட்டணிக் கட்சிகளும் பகிரங்கமாக அபகரித்துக் கொள்ளும் இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணையமே துணை போவதாகவும் புகார் கூறியுள்ளார்.

எனவே வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வராதவர்கள் என்று கூறி முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிப்பது போன்ற பாரபட்சமான முயற்சியில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம் என்றும், இதுதொடர்பாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த மாதம் அனுப்பி சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button