கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரதமர் அதிரடி நீக்கம்

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அண்டை நாடான நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டிப்பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு பிரதமர் ஒலி பரிந்துரைத்தார். இது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அக்கட்சியின் துணைத் தலைவர் பிரசந்தா பிரதமர் ஒலியை கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே பிரதமர் கே.பி.சர்மா ஒலி வகித்து வந்த கட்சித் தலைவர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டு புதிய தலைவராக மாதவ் குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ஒலி நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியினரிடம் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தது குறித்து அவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் பதில் ஏதும் அளிக்காததால் கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்பட்டு கட்சியின் நிலைக்குழு கூட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் நாராயண் காஜி ஷ்ரேஷ்தா கூறியுள்ளார்.