அரசியல்உலகம்கவர் ஸ்டோரி

நவம்பர் புரட்சி..! – மானுடத்தின் அடுத்த தலைமுறைக்கான திசை.!

“ஆள்பவர்களின் அடிமைகளே குடிமக்கள்” என்று பல ஆண்டுகள் இருந்ததை புரட்டி போட்டது தான் நவம்பர் புரட்சி. “குடிமக்கள் நம் அடிமைகள் தான், அவர்களால் எதுவும் செய்ய முடியாது” என்று நம்பி கொண்டிருந்த மன்னர்களும், நில பிரபுக்களுக்கும் மக்களை கண்டால் பயம் வந்தது நவம்பர் புரட்சியின் பின் தான். “கம்யூனிசம் எல்லாம் வெறும் புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள் தான், அவை எப்போதும் நிஜவாழ்வில் நடக்காது” என்று கருதிக்கொண்டிருந்த பெருமுதலாளிகள் மனதில் மண்ணை அள்ளிப்போட்டு கம்யூனிசம் முதன்முறையாக மலர்ந்தது (இந்த) நவம்பர் புரட்சியால் தான். உலகின் முதல் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர காரணமாக அமைந்ததும் நவம்பர் புரட்சி தான். அது என்ன நவம்பர் புரட்சி? அப்படி என்ன செய்தது?

18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் பரவிகொண்டிருந்தது. அதனால் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மக்களின் உழைப்பு படுமோசமாக சுரண்டப்பட்டு கொண்டிருக்க, அப்போதைய ரஷ்சியாவில் நிலவுடமையாளர்களால் ரஷ்ய மக்களின் உழைப்பு சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போதைய ரஷ்யா ஜார் என்ற மன்னர் பரம்பரையால் ஆளப்பட்டு கொண்டிருந்தது. அவர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் அவை ஜார் மன்னரால் கொடூரமாக அடக்கப்பட்டது. இது மக்கள் மனதில் அனலாக கொதித்துக்கொண்டிருந்தது.

அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் சிறுகலவரமாக தொடங்கிய முதலாம் உலகப்போரில் ஜார் மன்னரின் ரஷ்ய பேரரசு களமிறங்கியது. அதில் ஜெர்மன் இராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய இராணுவம் சின்னாபின்னாமாகியது. அதோடு நாட்டின் மொத்த வளமும் போருக்கு ஒதுக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தடுமாறினார்கள். மேலும் இராணுவத்தினருக்கு போதிய உணவு கிடைக்காமல் அவர்களும் அரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தார்கள். இவை எல்லாம் ஆளும் மன்னனுக்கு எதிராக திரும்பியது.

அதுவரை இரகசியமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள். நாடு முழுவதும் அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டங்களும் நடைபெற்றன. தங்கள் குறையை அரசுக்கு தெரிவிக்க பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி ஜார் அரசர் தங்கியிருந்த மாளிகை நோக்கி அமைதி பேரணி நடத்தினர். ஆனால் அதை கூட பொறுக்க முடியாத ஜார் மன்னர், மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார். அந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வீழ்ந்தார்கள். ஞாயிற்று கிழமை இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதால் ‘இரத்த ஞாயிறு’ என்றே இது அழைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதுவரை அமைதியாக இருந்த மக்களையும் புரட்சி பாதைக்கு கொண்டு சென்றது. இதன் காரணமாக மக்கள் எழுச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

அடுத்தடுத்து நடந்த புரட்சியில் இராணுவத்தினரும் மக்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரஷ்ய பேரரசரான ஜார் இரண்டாம் நிக்கோலஸ் தனது பதவியில் இருந்து விலகினார். பல ஆண்டுகளாக மக்களை சுரண்டிய மன்னராட்சி மக்கள் போராட்டத்தினால் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டமே ‘பெப்ரவரிப் புரட்சி’ என அழைக்கப்படுகிறது. இந்த மக்கள் போராட்டம் வெற்றி பெற்றாலும் ரஷ்ய ஆட்சியானது மக்களின் கைகளுக்கு வராமல் நிலவுடமையாளர்கள் கையிலும் பெருமுதலாளிகள் கையிலும் சிக்கிக் கொண்டது. ஜார் மன்னருக்கு மாற்றாக இளவரசர் ஜார்ஜ் இல்வோவ் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த அரசும் தொடர்ந்து போரில் ஈடுபடுவதை ஆதரித்தது. மேலும் புரட்சியில் ஈடுபட்ட பிற தலைவர்களை ஒடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. நாட்டில் நிலவிய மோசமான சூழ்நிலையை இந்த அரசும் அதிகப்படுத்தியது.

இதன் காரணமாக லெனின் தலைமையிலான ‘போல்ஷ்விக்குகள்’ மக்களை திரட்டி இடைக்கால அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது. இலட்சகணக்கான மக்கள் லெனின் தலைமையில் திரண்டார்கள். ஆயுதம் ஏந்தி போல்ஷ்விக் கட்சியினர் நடத்திய இந்த புரட்சி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ‘செம்படைகள்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள், தற்காலிக அரசின் படைகளை மக்கள் துணையோடு வீழ்த்தி 1917 நவம்பர் 7 அன்று அனைத்து அரசு கட்டிடங்களையும் கைப்பற்றித் அங்கு செங்கொடியை பறக்கவிட்டார்கள். முதலாளிகளின் இடைக்கால அரசாங்கம் மக்கள் போராட்டத்தின் முன் மண்டியிட்டது. இந்த புரட்சியே ‘நவம்பர் புரட்சி’ என்று உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. அதுவரை உழைக்கும் மக்களுக்கு எட்டாத அரசு உழைக்கும் மக்களுக்கும் வசப்பட்டது. மார்க்சிய கொள்கை எல்லாம் வெறும் புத்தகத்தில் மட்டுமே இருக்கும் என்று சொல்லப்பட்ட காலத்தில் லெனின் மூலம் அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் மலர்ந்தது தான் சோவியத் என்னும் பாட்டாளி வர்க்க அரசு. இந்த அரசை தான் ரவீந்திரநாத் தாகூர் மானுடத்தின் அடுத்த தலைமுறைக்கான திசை என்று வர்ணித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button