தமிழ்நாடுநெல்லை

திறந்த அன்றே இழுத்து மூடப்பட்ட மொபைல் கடை! இப்படியும் ஒரு காரணமா என வியப்பு!

திருவிழா காலங்களில் பிரபல கடைகள் மட்டுமல்லாமல் சிறிய கடைகள் கூட ஆஃபர்களை வெளியிட்டு மக்கள் ஈர்ப்பது சகஜமானது. அதுபோல புதிய கடைகள் திறக்கும் போதும் பல அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு மக்களை ஈர்க்கும். ஆனால் நெல்லையில் அப்படி அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு தொடங்கப்பட்ட ஒரு கடை வெளியிட்ட அன்றே இழுத்து மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பில் அலங்கார் மொபைல்ஸ் என்னும் கடை தனது 6 வது கிளையை தொடங்கியுள்ளது. அதன் உரிமையாளர் துவக்கவிழா சலுகையாக 6 ரூபாய்க்கு ஹெட்செட்டும், 6 ரூபாய்க்கு டெம்பர்கிளாசும் விற்பனை செய்யப்படுகிறது என விளம்பரம் செய்துள்ளார். அதை கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடையின் முன்பு குவிந்துள்ளனர்.

நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் சாதாரண ஹெட்செட்டுகள் கூட ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது என்று வாங்கியவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்ல அவர்களும் கடைக்கு வந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவு கூட்டம் கூடியிருக்கிறது. இந்த தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் சென்றுள்ளது.

தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையுடன் வந்து கடைக்கு சீல் வைத்தனர். அதோடு கடையின் உரிமையாளரை பிடித்து விசாரணை செய்தும் வருகின்றனர். கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்று கவலைப்படாமல் வியாபாரத்துக்காக கடை உரிமையாளர் செய்த செயல் அந்த கடையையே மூடும் நிலைக்கு கொண்டுவந்து விட்டது.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button