மணமக்களுக்கு புதுவகையான ‘திருமண பரிசு’ … பூச்செண்டுகளில் வரும் ‘ஃபோலிக் ஆசிட்’ மாத்திரைகள்

நவீன காலக்கட்டத்தில் திருமணத்துக்கு பின் கருத்தரித்தல் என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே எவ்வித குறைபாடுகள் இல்லாவிட்டாலும், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது என்பது சவாலாக இருந்து வருகிறது.

அதற்கு மரபணு மாற்றப்பட்ட இயற்கை மற்றும் பாஸ்ட்புட் உணவுகள் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் ஆசிட் பெண்களின் உடலில் தேவையான அளவு இருப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

ஆனால் திருமணத்துக்கு பின் திடீரென கருவுரும் பெண்கள் விட்டமின் பி, பி9, இரும்பு சத்து குறைபாடுகளால் குழந்தை பெற்றெடுப்பதில் பலவித மகப்பேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

குறிப்பாக, கரு உண்டாவதில் பிரச்னை, கரு தங்கலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களைப் பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கவே, மருத்துவர்கள் வைட்டமின் பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்கும், கருவுறப்போகும் பெண்களுக்கும் பரிந்துரைக்கின்றனர்.

தற்போது திருமணங்களில் பொக்கே, மொய் போன்ற பரிசுகளுக்கு இடையே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் தருவது படித்த சமூகத்தினரிடையே டிரெண்டாகி வருகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கருவளர்ச்சிக்கு இந்த மாத்திரைகள் இன்றியமையாததாக திகழ்வதால் மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

அதேபோல், திருமணத்திற்கு தயாராகும்போதே பெண்கள் இந்த மாத்திரிகைகளை உட்கொண்டு வந்தால் கர்ப்பகாலத்தில் மிகுந்த பயனளிக்கும் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புதுவகை பரிசளிப்பு முறையை நாமும் பின்பற்றலாமே…