திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்

ஒட்டன்சத்திரம் அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை, காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே தொப்பம்பட்டி சாலையில் உள்ள முட்புதரில் கடந்த ஐந்தாம் தேதி இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் இறப்பிற்கான காரணம் குறித்து, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது..இறந்த அந்த பெண், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி இந்திரா காலணியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஆவார். வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்த அந்த பெண், உடன் பணிபுரிந்த தங்கதுரை என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆங்கில வருடப்பிறப்பு அன்று கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, சென்ற ஜெயஸ்ரீ, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்த போலீசார், அவரிடம் கடைசியாக பேசிய காதலன் தங்கதுரையிடன் விசாரணை நடத்தினர்.
அதில், சம்பவத்தன்று, ஜெயஸ்ரீ, காதலன் தங்கதுரையைக் காண சென்றதும், அப்போது, திருமணம் செய்து கொள்வது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர் ஜெகநாதனின் உதவியோடு, ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து தங்கதுரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.