Scoop News

தமிழக அரசுக்கே தெரியாமல் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு – PFI அமைப்பு குற்றச்சாட்டு!

ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், இதுபோல் தமிழக அரசுக்கு தெரியாமல், தமிழகத்தில் யாரும் சோதனை நடத்த முடியாது

தேசிய அளவில் செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 9 மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகளின் இல்லங்கள் என 26 இடங்களில் மத்திய அமலாக்கத்துறை வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தியது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் 76 வங்கி கணக்குகுள், அதன் கிளை அமைப்புகள் நிர்வாகிகளின் 17 வங்கிக் கணக்குகளில், சுமார் 120.5 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டு, அவை உடனடியாக எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்கத் தான் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக கூறப்பட்டது.

இதில் பாப்புலர் ஃப்ரண்டின் துணை அமைப்பான ரிகாப் இந்தியா பவுண்டேசன் அமைப்பு என்பது, வட இந்தியா மாநிலங்களில் உள்ள பின்தங்கிய மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுத்தல், பள்ளி செல்வோம் என்ற திட்டத்தின் மூலம் பள்ளி கட்டணம், கல்வி உபகரணங்கள் பெற வசதியில்லாமல், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் கல்விச் செலவை ஏற்றல் உள்ளிட்ட சேவைகளை ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் செய்து வருவதாக அந்த அமைப்பின் இணையதளங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் சென்னை தலைமை அலுவலகம், மதுரை, தென்காசியில் உள்ள தேசிய நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையில், குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரங்களும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து, நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் நடந்த போராட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய நிர்வாகி, வழக்கறிஞர் யூசுப் பேசினார். அப்போது, காலை 7 மணியளவில் வீட்டில் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, எந்த வித முன்னறிப்பும் இன்றி, அமலாக்கத்துறையைச் சேர்ந்த, வெளி மாநில அதிகாரிகள் உட்பட 4 பேர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்ததாக தெரிவித்தார்.

இந்த சோதனை பற்றி மதுரை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், உளவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து, அமலாக்கத்துறையிடம் கேட்டபோது, தமிழக அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நாங்கள் டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சகத்தால் அனுப்பப்பட்டவர்கள் என திமிறாக தெரிவித்ததாகவும், மொபைல் எண்ணை கூட தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் வழங்காமல், அமலாக்கத்துறையினர் சென்று விட்டதாக குறிப்பிட்டார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், இதுபோல் தமிழக அரசுக்கு தெரியாமல், தமிழகத்தில் யாரும் சோதனை நடத்த முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிற்கு அடிமைப் போல் மாறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை, தமிழக அரசுக்கே தெரியாமல், பல இடங்களில் சோதனை நடத்திய நிகழ்வு அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

2 Comments

  1. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button