காதலித்து விட்டு கம்பி நீட்டிய இளைஞர்... குழந்தையுடன் நீதி கேட்கும் இளம்பெண்...

காதலித்து விட்டு கம்பி நீட்டிய இளைஞர்... குழந்தையுடன் நீதி கேட்கும் இளம்பெண்...

Published on

திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் பணியாற்றி வருபவர் ஸ்ருதி. 21 வயதான இவருக்கு, அருகில் பைக் ஷோ ரூம் நடத்தி வந்த பாஸ்கர் என்பவருடன் காதல் உண்டானது.

கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து தங்கள் அன்பை பெருக்கி வந்தனர். இதன் விளைவாக ஸ்ருதியின் வயிற்றில் கரு உண்டானது.

இதையடுத்து பாஸ்கரிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்யுமாறு ஸ்ருதி கெஞ்சினார். ஆனால் ஏதேதோ காரணங்களைக் கூறிய பாஸ்கர், ஸ்ருதியை கழற்றி விடும் வேலையில் இறங்கினார்.

அப்போதுதான் ஸ்ருதிக்கு ஒரு உண்மை தெரியவந்தது. பாஸ்கருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருந்ததை அறிந்தவர் தன்னை ஏமாற்றி விட்டாயே.. உன்னை சும்மா விட மாட்டேன் என்றும் கதறியிருக்கிறார்.

இதற்கு பாஸ்கர் கருவை கலைத்து விடுமாறும் ஸ்ருதியை மிரட்டியிருக்கிறார். ஆனால் கருவை கலைக்க முடியாது என ஸ்ருதி திட்டவட்டமாக கூறிய நிலையில் திருவள்ளூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

பின்னர் காக்களூர் பகுதியில் பாஸ்கர் தனி வீடு எடுத்து மனைவி ஸ்ருதியுடன் தங்கி வந்தார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்ததில் இருந்தே பாஸ்கருக்கும் ஸ்ருதிக்கும் இடையே பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. பிறந்த குழந்தை தனது ஜாடையில் இல்லை என பழியைப் போட்டவர், டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து பார்த்தே ஆக வேண்டும் என கூறினார்.

இதனால் விரக்தியடைந்த ஸ்ருதி, கைக்குழந்தையுடன் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று கணவர் பாஸ்கர் மீது புகார் அளித்தார்.

வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், குழந்தைக்கும் தனக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் காவல்துறையை கையெடுத்து வேண்டியுள்ளார்.

ஏற்கெனவே திருமணமானதை மறைத்து, இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது கொலைமிரட்டலும் விடுத்துள்ள பாஸ்கரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com