திருச்சியில் இரு பள்ளி வேன்கள் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையம் நுழைவுவாயில் அருகே, கேகே நகரை சேர்ந்த தனியார் பள்ளியின் இரண்டு வேன் ஓட்டுனர்களும் போட்டி போட்டுக்கொண்டு முந்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரு வேன்களும் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் காயம் அடைந்த பள்ளி மாணவர்களை வேனில் அப்படியே விட்டுவிட்டு, இரண்டு வேன் ஓட்டுநர்களும் தப்பியோடியதால் பள்ளி மாணவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இந்நிலையில் தகவலறிந்து பெற்றோர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.